தமிழ்
வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு
அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
வகை 4 புதுக் கவிதைப் போட்டி
உணர்வது எப்போது
தன் வயிறு காய்ந்தாலும்
இயலாதவர்க்கு
இயன்றதை செய்யும்
எம் தமிழர் பண்பாடு
எங்கே போனது
குடும்பங்களை இணைத்து
குதுகலித்தத் திருமணங்கள்
நீதி மன்ற வாயிலில்
நித்தம் மிதிபடுவதேன்
பசுவிற்கும் புறாவிற்கும்
நீதி தந்த எம் நெறிமுறை
பணத்திற்குள் கரைந்து
பாழானது எவ்வாறு
வள்ளலாரையே
சந்தேகித்த ஆன்மீகம்
போலிச் சாமியார்களுக்கு
புகலிடமானது ஏன்
ஏழைக்கு எழுத்தறிவித்தல்
இறைப் பணியே என்ற நாம்
கல்வியை காசாக்கும்
கலாச்சாரத்தை எங்கு கற்றோம்
பண்பில்லா முன்னேற்றம்
பம்பர வாழ்க்கையாகி
தள்ளாடிச் சுற்றி
தானே கவிழும் என்பதை
என்று நாம் உணரப்போகிறோம்
இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைஅ கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் --கொ.வை.அரங்கநாதன்